அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்: அதிருப்தியில் கே.சி.வீரமணி உள்பட 2 எம்.எல்.ஏ-க்கள் புறக்கணிப்பு!
சென்னை: சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் தனித்தனியாக நேற்று நடைபெற்றது. உட்கட்சிப் பூசல்கள் மற்றும் நிர்வாக மாற்றங்களுக்கு மத்தியில் நடைபெற்ற இக்கூட்டத்தில், முக்கியப் பிரமுகர்களான 2 எம்.எல்.ஏ-க்கள் பங்கேற்காமல் புறக்கணித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட முன்னாள் செயலாளரும் ஆற்காடு தொகுதி எம்.எல்.ஏ-வுமான எஸ்.எம்.சுகுமார், மற்றும் திருப்பத்தூர் மாவட்ட முன்னாள் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ கே.சி.வீரமணி ஆகியோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. முன்னதாக, கட்சித் தலைமைக்கு எதிராக இவர்கள் போர்க்கொடி தூக்கியதால், இவர்களது மாவட்டச் செயலாளர் பதவிகள் பறிக்கப்பட்டன. அதன்படி, சுகுமாரிடம் இருந்த பதவி சுமைதாங்கி ஏழுமலைக்கும், கே.சி.வீரமணியிடம் இருந்த பொறுப்பு டாக்டர் பசுபதிக்கும் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இவர்களைச் சமாதானப்படுத்தும் நோக்கில் தலைமைப் பொறுப்பில் இருந்து சுகுமாருக்குக் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியும், வீரமணிக்கு அமைப்புச் செயலாளர் பதவியும் மாற்றாக வழங்கப்பட்டன. ஆனால், அவர்கள் அந்தப் புதிய பொறுப்புகளை ஏற்க மறுத்துவிட்டதாகக் கூறப்படும் நிலையிலேயே, நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தையும் புறக்கணித்துள்ளனர். எனினும், கே.சி.வீரமணி தற்பொழுது தனிப்பட்ட காரணங்களால் அமெரிக்காவில் இருப்பதால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
நிர்வாகிகள் திடீர் வாக்குவாதம்: திருப்பத்தூரைப் பிரிக்கக் கோரிக்கை!
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் ரவிக்கு மாற்றாக நியமிக்கப்பட்ட லோகநாதன் உள்ளிட்ட புதிய மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்றனர். கூட்டத்தின் ஒரு பகுதியாக, திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர் திடீரென பொதுச் செயலாளர் பழனிசாமியுடன் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கட்சி அலுவலகத்தில் தற்காலிக சலசலப்பு ஏற்பட்டது.
வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிர்வாகிகள், "கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஒன்றியச் செயலாளர்களைத் சுதந்திரமாகப் பணியாற்ற விடாததே அதிமுக-வின் தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. எனவே, இனிவரும் காலங்களில் நிர்வாக வசதிக்காகத் திருப்பத்தூர் மாவட்டத்தை இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்க வேண்டும்" எனத் தலைமையிடம் வலியுறுத்தியதாகத் தெரிகிறது. அவர்களின் புகார்களைக் கேட்டறிந்த எடப்பாடி பழனிசாமி, "இதுகுறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என உறுதியளித்து அவர்களைச் சமாதானம் செய்து அனுப்பியுள்ளார்.

AthibAn Tv