கூட்டுறவு பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி சென்னையில் பிரம்மாண்ட பேரணி: 20-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் பங்கேற்பு!

Dina AthibAn
0


கூட்டுறவு பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி சென்னையில் பிரம்மாண்ட பேரணி: 20-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் பங்கேற்பு!

சென்னை: கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் மற்றும் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் நேற்று பிரம்மாண்ட கண்டனப் பேரணி நடைபெற்றது. எழும்பூர் சித்ரா திரையரங்கம் அருகில் தொடங்கி எல்.ஜி. சாலை சந்திப்பு வரை நடைபெற்ற இந்தப் பேரணிக்கு, சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சண்முகசுந்தரம், மாநிலத் தலைவர் முத்து விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தவெக (தமிழக வெற்றிக் கழகம்) தனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி, கூட்டுறவு பயிர்க் கடன்களை உடனடியாகத் தள்ளுபடி செய்யக் கோரி நடைபெற்ற இப்பேரணியில், தமிழகம் முழுவதிலும் இருந்து 20-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களைச் சேர்ந்த திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர். பேரணியில் பங்கேற்ற விவசாயிகள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆளும் அரசுக்கு எதிராகவும் தொடர் முழக்கங்களை எழுப்பியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் தற்கொலைகள் அதிகரிக்கும் அபாயம்: ஈசன் முருகசாமி எச்சரிக்கை!

பேரணியின் இடையே செய்தியாளர்களைச் சந்தித்த விவசாய சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி கூறியதாவது: "தேர்தல் பிரச்சாரத்தின் போது தவெக ஆட்சிக்கு வந்தால் 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்குக் கூட்டுறவு பயிர்க் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என அக்கட்சியின் தலைவர் உறுதியளித்தார். இது வெறும் தேர்தல் வாக்குறுதி அல்ல, விவசாயிகளுக்கான உத்திரவாதம் என்றும் பிரகடனப்படுத்தினார். இதனை நம்பியே விவசாயப் பெருங்குடி மக்கள் தவெக-விற்கு வாக்களித்தனர்.

ஆனால், புதிய அரசு பொறுப்பேற்ற பின்பு தற்போதைய நிலைமை தலைகீழாக உள்ளது. கடன் தள்ளுபடி கிடைக்கும் என ஆவலோடு எதிர்பார்த்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. ரூ.50 ஆயிரம், ரூ.75 ஆயிரம் என விவசாயிகளை வங்கி அதிகாரிகள் ஏலம் விட்டு அலைக்கழித்து வருகின்றனர். பயிருக்கு உரிய விலை கிடைக்காமலும், கடன் சுமை தாங்காமலும் தமிழகத்தில் நாள்தோறும் சராசரியாக 2 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதாக அரசிடமுள்ள புள்ளிவிவரங்களே தெரிவிக்கின்றன. அரசு தனது வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றத் தவறினால், இந்த தற்கொலைகளின் எண்ணிக்கை மேலும் உயரும் அபாயம் உள்ளது. எனவே, விவசாயிகளை மிரட்டும் போக்கை அதிகாரிகள் உடனடியாகக் கைவிட வேண்டும். கூட்டுறவு பயிர்க் கடன்களை உடனே ரத்து செய்யாவிட்டால், அடுத்தகட்டமாக மாநிலம் தழுவிய அளவில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்" என்று அவர் எச்சரித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!