சொத்துக் குவிப்பு வழக்கு: ரூ.200 கோடிக்கு மேல் சொத்து சேர்த்த ஹைதராபாத் டி.எஸ்.பி கைது; சஞ்சல்கூடா மத்திய சிறையில் அடைப்பு!
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் கைது செய்யப்பட்ட போலீஸ் டி.எஸ்.பி-யை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அவர் ஹைதராபாத்தில் உள்ள சஞ்சல்கூடா மத்திய சிறையில் பலத்த பாதுகாப்புடன் அடைக்கப்பட்டார்.
தெலங்கானா காவல்துறை கணினி சேவைகள் (PCS) துறையில் டி.எஸ்.பி-யாகப் பணியாற்றி வந்தவர் சங்கிரெட்டி பீம்ரெட்டி. இவர் தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக கோடிக்கணக்கில் சொத்துகளைக் குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ரகசியப் புகார்கள் வந்தன. இதன்பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கடந்த 2-ஆம் தேதி இப்ராகிம்பட்டினத்தில் உள்ள டி.எஸ்.பி பீம்ரெட்டியின் வீடு மற்றும் அவருக்குத் தொடர்புடைய 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடிச் சோதனை நடத்தினர். இந்தச் சோதனை அண்டை மாநிலமான கர்நாடகாவிலும் உள்ள அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளிலும் நீடித்தது.
டைரி கொடுத்த க்ளூ: ரூ.200 கோடி சொத்துகள், நகைகள் முடக்கம்!
அதிகாரிகள் நடத்திய இந்த அதிரடி சோதனையின் போது, டி.எஸ்.பி பீம்ரெட்டியின் வீட்டில் முக்கிய டைரி ஒன்று சிக்கியது. அதில் அவர் தனக்குச் சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துகளின் விவரங்கள் முழுவதையும் ரகசியமாக எழுதி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த டைரியின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய தீவிர விசாரணையில், அவர் சுமார் 200 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்துகளைக் குவித்திருப்பது வெளிச்சத்திற்கு வந்தது.
சோதனையின் முடிவில் 2 கிலோ தங்க நகைகள், 2 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.3.60 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டன. மேலும், ஹைதராபாத் இப்ராகிம்பட்டினத்தில் உள்ள ஒரு ஆடம்பர பங்களா, டெலிகாம் நகரில் உள்ள 2 மாடிக் கட்டிடம், தெல்லாபூரில் உள்ள 2 வீடுகள், சங்காரெட்டி மாவட்டத்தில் 3.5 ஏக்கர் விவசாய நிலம், கர்நாடகாவில் உள்ள 45 ஏக்கர் நிலம், விகாராபாத்தில் உள்ள வீட்டுமனை மற்றும் 2 ஏக்கர் விவசாய நிலம் ஆகியவை கண்டறியப்பட்டன. இதுதவிர, 'ராகவேந்திரா ராக் அண்ட் சாண்ட் மினரல்ஸ்' நிறுவனத்தில் உள்ள ரூ.75 லட்சத்திற்கான பங்குகள் மற்றும் வங்கியில் இருந்த ரூ.19.91 லட்சம் டெபாசிட் தொகை உள்ளிட்ட அவரது அனைத்து சொத்துகளையும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அதிரடியாக முடக்கியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட டி.எஸ்.பி பீம்ரெட்டி, நேற்று முன்தினம் இரவு நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். மனுவை விசாரித்த நீதிபதி, அவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த விவகாரம் தெலங்கானா காவல் துறையினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

AthibAn Tv