Type Here to Get Search Results !

மெஸ்ஸியின் உலக சாதனை; ஜோர்டானை வீழ்த்தி அர்ஜெண்டினா ‘ஹாட்ரிக்’ வெற்றி!



மெஸ்ஸியின் உலக சாதனை; ஜோர்டானை வீழ்த்தி அர்ஜெண்டினா ‘ஹாட்ரிக்’ வெற்றி!

டல்லாஸ் (ஆர்லிங்டன்): பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் 'ஜே' பிரிவு லீக் ஆட்டத்தில் ஜோர்டான் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜெண்டினா அணி அபார ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

மெஸ்ஸி இல்லாமல் அதிரடித் தொடக்கம்

ஏற்கனவே அர்ஜெண்டினா அணி நாக்-அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்டதால், பயிற்சியாளர் அணியில் 9 முக்கிய மாற்றங்களைச் செய்திருந்தார். இதனால் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி மாற்று ஆட்டக்காரராகவே அமர வைக்கப்பட்டார். டல்லாஸ் மாகாணம் ஆர்லிங்டனிலுள்ள 'ஏடி அண்ட் டி' (AT&T) மைதானத்தில் நேற்று காலை நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 19-வது நிமிடத்திலேயே, அர்ஜெண்டினாவின் கியோவனி லோ செல்ஸோ 20 அடி தூரத்திலிருந்து ஒரு பிரமாதமான ஃபிரீ கிக் (Free Kick) மூலம் முதல் கோலடித்து அணிக்கு முன்னிலை தந்தார். தொடர்ந்து ஆட்டத்தின் 31-வது நிமிடத்தில் லவுடேரா மார்ட்டினஸ் மற்றொரு கோலை அடிக்க, முதல் பாதியில் அர்ஜெண்டினா 2-0 என முன்னிலை பெற்றது.

பதிலடி கொடுத்த ஜோர்டான்

இரண்டாம் பாதியில் ஆக்ரோஷமாக மீண்டெழுந்த ஜோர்டான் அணி வீரர் முசா அல்-தாமாரி, ஆட்டத்தின் 55-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து அர்ஜெண்டினாவுக்கு அதிர்ச்சியளித்தார்.

களமிறங்கிய மெஸ்ஸி; புதிய உலக சாதனை!

ஆட்டத்தின் 60-வது நிமிடத்தில் ரசிகர்களின் பலத்த கோஷங்களுக்கு இடையே லயோனல் மெஸ்ஸி மாற்று ஆட்டக்காரராகக் களமிறங்கினார். ஆட்டத்தின் 80-வது நிமிடத்தில் அர்ஜெண்டினாவுக்குக் கிடைத்த ஃபிரீ கிக் வாய்ப்பை மெஸ்ஸி அற்புதாமாக கோலாக மாற்றினார். இதனால் அர்ஜெண்டினா 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, லீக் சுற்றில் ஹாட்ரிக் வெற்றியுடன் தனது பிரிவில் முதலிடத்தைப் பிடித்தது. 'ஜே' பிரிவிலிருந்து அர்ஜெண்டினா, ஆஸ்திரியா, அல்ஜீரியா ஆகிய அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறின. வெற்றிக்கணக்கைத் தொடங்காத ஜோர்டான் தொடரிலிருந்து வெளியேறியது.

7 போட்டிகளில் தொடர்ந்து கோல்: நேற்றைய போட்டியில் கோல் அடித்ததன் மூலம், உலகக் கோப்பை வரலாற்றில் தொடர்ந்து 7 போட்டிகளில் கோல் அடித்த ஒரே வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை லயோனல் மெஸ்ஸி படைத்துள்ளார். இதற்கு முன்பு பிரான்ஸின் ஜஸ்ட் ஃபோன்டைன் (1958), பிரேசிலின் ஜெயிர்சின்ஹோ (1970) ஆகியோர் தொடர்ந்து 6 உலகக் கோப்பை போட்டிகளில் கோல் அடித்ததே சாதனையாக இருந்தது.

மேலும், உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் வரிசையிலும் மெஸ்ஸி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். நேற்றைய கோலையும் சேர்த்து உலகக் கோப்பையில் அவரது மொத்த கோல்களின் எண்ணிக்கை 19-ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.