“சதிகளை முறியடித்து இந்த ஆண்டே வங்கதேசம் திரும்புவேன்” - இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஷேக் ஹசீனா அதிரடி பேட்டி!
புதுடெல்லி: அனைத்து தடைகளையும், தனக்கு எதிராக பின்னப்பட்ட சதிவலைகளையும் முறியடித்து இந்த ஆண்டே நான் எனது தாய்நாடான வங்கதேசத்திற்குத் திரும்புவேன் என்று அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2024-ம் ஆண்டு வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் இந்தியாவில் வசித்து வரும் நிலையில், தற்போது தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்துப் பேசியுள்ளார்.
மரண தண்டனை தீர்ப்பு குறித்து சாடல்:
கடந்த ஆண்டு நவம்பர் மாதம், வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஷேக் ஹசீனாவுக்கு மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறி மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இதுகுறித்து அவர் பேசுகையில், "எனக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு முற்றிலும் அநீதியானது. இது சட்டவிரோதமான, அரசியலமைப்புக்கு எதிரான மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்ட ஒரு பழிவாங்கும் நடவடிக்கையாகும். எங்களது 'அவாமி லீக்' கட்சியைத் தலைவர் இல்லாத ஒன்றாக மாற்றுவதற்காக, தற்போதைய அரசு நீதித்துறையை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறது. இது போன்ற முயற்சிகள் கடந்த காலங்களிலும் நடந்துள்ளன. அவை அப்போதும் தோல்வியடைந்தன, இப்போதும் நிச்சயம் தோல்வியடையும்" என்று சாடினார்.
எனக்கு மரண பயம் கிடையாது!
தொடர்ந்து தனது உயிருக்கு இருக்கும் அச்சுறுத்தல்கள் குறித்துப் பேசிய ஷேக் ஹசீனா, "எனக்கு மரண பயம் என்பது எப்போதும் கிடையாது. கடந்த 1975-ம் ஆண்டிலேயே எனது பெற்றோர், சகோதரர்கள் என ஒட்டுமொத்த குடும்பத்தையும் நான் இழந்துவிட்டேன். கடந்த காலங்களில் ஆகஸ்ட் 21-ம் தேதி நடைபெற்ற கையெறி குண்டு (Grenade Attack) தாக்குதல் உள்பட என்னைக் கொல்லப் பலமுறை முயற்சிகள் நடந்தன. எனக்கு எதிராகப் பல சதித்திட்டங்கள் தீட்டப்பட்ட போதிலும், அத்தனை சதிவலைகளையும் உடைத்து நான் எப்போதும் வங்கதேச மக்களின் பக்கமே நின்றேன்" என்று உருக்கமாகக் குறிப்பிட்டார்.
மக்களின் ஆதரவோடு மீள்வேன்:
மேலும், "மக்களின் வாக்குகள் மூலம் 5 முறை பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, நாட்டின் வளர்ச்சிக்காக என் வாழ்நாளை அர்ப்பணித்து உழைத்தேன். எனது ஒட்டுமொத்த வாழ்க்கையும் வங்கதேச மக்களோடும், அவாமி லீக் கட்சியோடும், ஜனநாயகப் போராட்டத்தோடும் பிணைந்துள்ளது. எனவே, நான் மிகத் தெளிவாகக் கூறுகிறேன், அனைத்து தடைகளையும் சதிகளையும் முறியடித்து, இந்த ஆண்டே நான் என் தாய்நாட்டுக்குத் திரும்புவது உறுதி" என்று ஷேக் ஹசீனா மிக உறுதியுடன் தெரிவித்துள்ளார்.



AthibAn Tv