
காங்கிராஸ் பொதுச் செயலரும், சோனியாவின் மகளுமான பிரியங்கா, டில்லி வி.ஐ.பி., பகுதியில், அரசு பங்களாவில், தன் குடும்பத்துடன் பல ஆண்டுகளாக வசித்து வருகிறார். பிரியங்காவுக்கு, டில்லியில் சொந்தமாக தனி வீடு உள்ளது. இருப்பினும், அரசு ஒதுக்கிய பங்களா, நல்ல இடத்தில் இருப்பதால், அங்கேயே வசிக்கிறார்.
அரசு பங்களாவில், ஆறு பெரிய அறைகள்; புல்வெளி தோட்டம் என, பெரிதாக உள்ளது. சில மாதங்களுக்கு முன், சோனியா, ராகுல் மற்றும் பிரியங்காவிற்கு, எஸ்.பி.ஜி., எனப்படும், சிறப்பு பாதுகாப்பு குழு அமைப்பால் கொடுக்கப்பட்ட பாதுகாப்பை, மத்திய பா.ஜ., அரசு திரும்ப பெற்றது. இதற்கு பதிலாக, சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படை பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. எஸ்.பி.ஜி., அமைப்பு, பிரதமரின் பாதுகாப்பை கவனித்து வருகிறது.
பிரியங்கா தங்கியுள்ள அரசு பங்களாவுக்கு, வாடகை, 700 ரூபாய் தான். இதையும், எஸ்.பி.ஜி., அமைப்பு கொடுத்து வந்தது. இந்த பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்ட பிறகு, எல்லாமே மாறிவிட்டது. பிரியங்கா, அரசின் எந்த பதவியிலும் இல்லை; எம்.பி.,யாகவும் பதவி வகிக்கவில்லை. இதனால், அவருக்கு அரசுபங்களா ஒதுக்க முடியாது. இதுவரை எஸ்.பி.ஜி., பாதுகாப்பு கொடுத்த காரணத்தால், அரசு பங்களா ஒதுக்கப்பட்டிருந்தது.
இனி, அரசு பங்களாவுக்கு, வெளி மார்க்கெட்டில் என்ன வாடகை கிடைக்குமோ, அதை பிரியங்கா செலுத்த வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது. குறைந்த பட்சம், 60 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வாடகை இருக்கும் என சொல்லப்படுகிறது. இது தொடர்பாக ஒரு கடிதமும், அரசு தரப்பிலிருந்து பிரியங்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வாடகை அதிகமானதால் அரசு பங்களாவை காலி செய்வதா என குழப்பத்தில் இருக்கிறார், பிரியங்கா. ஆனால், 'பிரியங்காவை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்பதில் தான், பா.ஜ.க முனைப்பாக இருக்கிறது' என்கின்றனர், காங்கிரசார்.


AthibAn Tv