
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குமாறு, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆருஷி ஜெயின் என்ற டாக்டர், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு ஊதியம் சரிவர வழங்கப்படுவதில்லை. ஊதியம் குறைவாகவும், தாமதமாகவும் வழங்கப்படுகிறது. அதனால், ஊதியத்தை உடனே வழங்க உத்தரவிட வேண்டும்.
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள், 14 நாள் தனிமையில் இருப்பது கட்டாயம் அல்ல என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதை கட்டாயம் ஆக்க வேண்டும்.டாக்டர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களை கொரோனா தாக்க அதிக வாய்ப்பு உள்ளதால், அவர்கள் மூலம் குடும்பத்தார் பாதிக்கப்படக் கூடும். எனவே, அவர்களுக்கு தனியாக தங்குமிடம் ஏற்பாடு செய்ய, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, நேற்று, உச்ச நீதிமன்ற நீதிபதி, அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமர்வு பிறப்பித்த உத்தரவு:டாக்டர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள், கொரோனாவை எதிர்த்து போராடும் வீரர்கள். அவர்களுக்கு ஊதியம் வழங்க, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அவர்களுக்கும், தனிமைப்படுத்தும் வசதி செய்து தர வேண்டும்.டாக்டர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியம், தனிமையில் இருக்க செய்து தந்துள்ள வசதிகள் ஆகியவற்றை, நான்கு வாரங்களுக்குள், நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு, அமர்வு உத்தரவிட்டது.
டில்லி அரசுக்கு எச்சரிக்கை
டில்லி அரசு மருத்துவமனையில், கவனிக்க ஆளின்றி கிடந்த கொரோனா நோயாளிகளையும், இடப் பற்றாக்குறையால், உயிரிழந்தோரின் சடலங்கள், ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டதையும், அங்கு பணியாற்றும் டாக்டர் ஒருவர், 'வீடியோ' எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.இதையடுத்து, டில்லி அரசு, அந்த டாக்டரை பணியிடை நீக்கம் செய்து, வழக்கு பதிவு செய்து உள்ளது. நேற்று, இதை கண்டித்த உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு, 'தகவல் அம்பலமாக உதவிய துாதரை சாகடிக்காதீர்கள்; அவரை துன்புறுத்துவதை நிறுத்திக் கொள்ளுங்கள்' என, டில்லி அரசுக்கு எச்சரிக்கை விடுத்தது.


AthibAn Tv