
நைஜீரியாவில் கடந்த 2015 ம் ஆண்டில் பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடலை, லடாக்கில் சீன வீரர்களுடன் நடந்த மோதலில் வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களின் உடல் என சமூக வலைதளங்களில் தவறாக பரப்பப்பட்டது தெரியவந்துள்ளது. இதனால், சமூக வலைதளங்களில் வரும் படங்களில் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 15ம் தேதி சீன வீரர்களுடன் நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சிலர் காயமடைந்துள்ளனர். மோதலில் சீன வீரர்களுக்கும் நிறைய உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சீன வீரர்களின் தாக்குதலில் உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில் உள்ள இந்திய வீரர்களின் உடல் என ஒரு புகைப்படம் பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் வெளியாகி பரவி வந்தது. அதனை பலரும் ஷேர் செய்தனர். இதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு தலைப்பு கொடுத்து பகிர்ந்தனர்.
அந்த படத்தின் உண்மை தன்மை குறித்து ஆராய்ந்ததில், அந்த படம் நைஜீரியாவில் கடந்த 2015ம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம் என தெரியவந்துள்ளது. நைஜீரியாவின் மைதிகுரியில் சிதிலமடைந்த ராணுவ வீரர்களின் உடல்களை ராணுவம் அடக்கம் செய்த புகைப்படம் அது.
இது குறித்த செய்தியில், பயங்கரவாதிகளுடன் நடந்தே மாதலில் கொல்லப்பட்ட வீரர்களின் உடல்களை மைதிகுரிக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை நைஜீரியாவில் பல செய்தி இணையதளங்கள் வெளியிட்டிருந்தது தெரியவந்துள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், சமூக வலைதளங்களில் வெளியாகும் புகைப்படங்களை பார்த்தவுடனே நம்பக்கூடாது. அதன் உண்மை தன்மையை அறிந்த பிறகு தான் அதனை பகிர வேண்டும் என்றனர்.


AthibAn Tv